Pages

Banner 468

Subscribe
Saturday, February 6, 2010

தலித் மக்களின் சமூக பாதுகாப்பும் மத்திய மாநில அரசின் அலட்சியமும்

0 comments
 
 சனி, 06 பெப்ரவரி 2010 ல் வெளிவந்த என்னுடைய இந்த கட்டுரையை கீற்று தளத்தில் கானவும்.

நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதன், நிலத்தை தன் கட்டிப்பாட்டிற்குள் கொண்டுவந்த பின்புதான் நிலைத்து வாழவே துவங்கினான். அன்று முதல் இன்று வரை நடந்த அனைத்து மோத‌ல்களும் நிலத்தை மையப்படுத்தியே நடந்துவருகிறது.  நில‌த்தை வெறும் பிழைப்புக்கான‌ வ‌ழி என‌ எண்ணாம‌ல், இந்தியாவில் அவை அதிகார‌த்தின் குறியீடாக மாற்றப்பட்டிருப்பதால் இங்கு நில‌த்தின் அவ‌சிய‌ம் க‌ட்டாய‌மாகிற‌து. இந்தியாவைப் பொருத்தவரை வெள்ளையர்கள் ஆட்சியில் தான் இந்த தேசமே ஒரு வடிவம் பெற்றது, அப்போதும் நிலத்தின் பெரும்பங்கு ஆளும் வர்க்கம் எனப்படும் அரசர், பிரப்புக்கள் ஆகியோரிடம் மட்டுமே இருந்தது.

இந்நிலையில் ஆங்கிலேயேர் ஆட்சியில் பார்ப்பனர்கள் மற்றும் வெள்ளாளர்கள் காணியக்காரர்களாக உயர்ந்தார்கள். பின் படிப்படியாக நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு சாதி இந்துக்களும் பட்டாதாரர்களாக மாறினார்கள். தொடர் பஞ்சம், உள்நாட்டுக் கலவரம் போன்ற பல்வேறு பாதிப்புகளால் நாடு பலவீனப்பட்டு கிடந்த காலகட்டத்தில் பிழைப்பு நடத்த வழியில்லை என தலித் மக்கள் ஆங்கிலேயர்களிடம் முறையிட பார்ப்ப‌ன‌ ம‌ற்றும் சாதி இந்துக்க‌ளின் ப‌ல‌த்த‌ எதிர்ப்பையும் பொருட்ப‌டுத்தாம‌ல் பஞ்சமி நிலத்தை ஆங்கிலேயர்கள் தலித் மக்களுக்கு வழங்கினார்கள். நீங்க‌ள் கொடுப்ப‌துபோல் கொடுங்க‌ள் நாங்க‌ள் எடுத்துக்கொள்கிறோம் என‌ காத்துக்கிட‌ந்த‌ ஓநாய்க் கூட்டங்கள் அத்த‌னை பஞ்சமி நி ல‌ங்க‌ளையும் அப‌க‌ரித்துக் கொண்ட‌ன. இம் மக்கள் ஊட‌க‌ வ‌லிமைய‌ற்ற‌ ஊமைக‌ள் என்ப‌தால் ஆங்காங்கு நடைபெரும் நில‌ உரிமைப் போராட்ட‌ங்க‌ள் இன்றும் இருட்ட‌டிப்பு செய்ய‌ப்ப‌டுகிற‌து.


சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர்களை கடுமையாக சாடியுள்ளதற்க்குக் காரணம் இதுதான் "கன்னியாகுமரி அருகிலுள்ள ஏழுதேசம் கிராமத்தில் தலித் மக்களுக்கு அரசு அளித்த வீட்டுமனைகளை கோயில் நிலம் என்று சாதி இந்துக்கள் அபகரித்துக் கொண்டார்கள். மேலும் இவர்கள் இந்த நிலத்தை கடந்த 2003ஆம் ஆண்டு பதிவுசெய்ய முயலுகையில் அதை பதிவுத்துறை நிராகரித்தும் விட்டது. இதனையடுத்து அந்த நிலத்தை தலித் மக்களுக்கு வீட்டுமனையாக அளித்த‌ அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆணையை எதிர்த்து, க‌ட‌ந்த‌ ஆறு ஆண்டுக‌ளாக‌ இந்த‌ ம‌னைக‌ளை த‌லித் ம‌க்க‌ள் உரிமைகோர‌க் கூடாதென‌ சாதி இந்துக்க‌ள் உய‌ர்நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்காடி வ‌ருகிறார்க‌ள் (The Hindu, Sep 13, 2009, Page 5), இந்த‌ வ‌ழ‌க்கை விசாரித்த‌ நீதிப‌திக‌ள் உட‌ன‌டியாக‌ இந்த‌ வீட்டும‌னைக‌ளை த‌லித் ம‌க்க‌ளுக்கு கொடுத்திட‌ வேண்டும் என உத்த‌ர‌விட்ட‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் தாம‌தித்த‌ மாவ‌ட்ட‌ நிர்வாக‌த்தை க‌டிந்து கொண்ட‌து. ஆக‌ எந்த‌ வ‌கையிலும் த‌லித் ம‌க்க‌ளுக்கு பொது சொத்து போய் சேர்ந்துவிட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ த‌மிழ‌க‌ம் முழுக்க‌ சாதிப் பாகுபாட‌ற்று கழகம் மற்றும் க‌ட்சிக‌ள் இணைந்து மிக‌த் தெளிவாக‌ செய‌ல் ப‌ட்டுவ‌ருகின்றன.

அரசாங்கத் திட்டங்கள் தலித் மக்களுக்கு சென்றடையாவண்ணம் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதற்கு மற்றும் ஓர் எடுத்துக்காட்டு சிவகங்கை அருகில் வசிக்கும் ராஜி! சிவகங்கை மாவட்டம் கீழவிளங்சம்பட்டியில் வசித்துவரும் ராஜி கடந்த 2008 பிப்ரவரி 10ம் தேதி தன்னுடைய இரண்டு வயது குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து போட அழைத்துச் சென்றார். ஆனால் சாதி இந்துக்கள் அதை தடுத்துவிட்டார்கள். காரணம் ராஜி உட்பட ஐந்து தலித் மக்கள் அரசாங்கத்தின் 2 ஏக்கர் நிலம் திட்டத்தின் மூலம் பயனடைந்தார்கள். அவர்கள் பெற்ற அந்த 10 ஏக்கர் நிலத்தையும் கோயிலுக்கு கொடு எனக் சாதி இந்துக்கள் கேட்க, தலித் மக்கள் அதை நிராகரிக்க, அந்த ஐந்து குடும்பத்திற்கும் நீர், நெருப்பு, உப்பு உறவு கூடாது என பஞ்சாயத்தால் தீர்மானிக்கப்பட்டதால் அவர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து நிராகரிக்கப்பட்டது. தேசிய அளவில் செயல்படுத்தப்படும் போலியோ சொட்டுமருந்து திட்டத்தைக்கூட தலித் மக்கள் பயன்படுத்தக் கூடாது என எண்ணும் இத்தகைய கொடியவர்கள் முன் சட்டம் தன் கடமையைச் செய்யுமா?

இது போன்ற எண்ணற்ற வன்செயல் தலித் மக்கள் மீது ஒவ்வொரு நிமிடமும் நிகழ்ந்தவண்ண‌மே உள்ளது. தலித் மக்களை அடிமைப்படுத்த வெட்கப்படாத இவர்களின் கையில் தான் இந்த தேசத்தின் எல்லா பொது வளங்களும் உள்ளன. நீர் நிலைகள், காடு கழனி முதல் சுடுகாடுவரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இச்சாதி இந்துக்கள், ஆங்காங்கே எழும் சில தலித் மக்களின் உரிமைக்குரல்களை அடக்காமல் ஓய்வதில்லை.

இந்த நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் நேர்முக மற்றும் மறைமுக வரிசெலுத்தும்போது, இங்கு எதுவுமெ இலவசம் இல்லை, சொத்துக்கள் யாவுமே அரசாங்கத்திற்கு சொந்தம், அரசாங்கமோ மக்களுக்கு சொந்தம். இதை ஏன் இந்த நாட்டின் சாதி இந்துக்கள் ஏற்க மறுக்கிறார்கள்? சட்ட திட்டங்களால் தீண்டாமையை ஒழித்துவிட முடியாது; மாறாக இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் சமத்துவ சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இன்று நாட்டின் எல்லா மூலையிலும் தீண்டாமை பரவியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரை படித்தவர்களே மிக நுணுக்கமாக தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள்.

 8 சதவிகித வளர்ச்சி, 72 சதவிகித படிப்பறிவு என கூறிக்கொள்ளும் தமிழகத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். அரசு பள்ளியில் படிக்கும் ஜந்தாம் வகுப்பு மாண‌வனுக்கு ஆனா ஆவன்னா கூட கற்றுக் கொடுப்பதில்லை. இவையெல்லாம் நடைமுறை பிழையல்ல. தலித் மக்களின் வளர்ச்சியை முளையிலேயே கிள்ளியெறிய கழகங்கள் நடத்தும் கபட நாடகம்.

விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இந்த நாட்டில் நிலம் தான் ஒரு மனிதனின் வாழ்வாதாரம்; கல்வியால் மட்டுமே கரைசேர்ந்துவிட முடியாது என ஆங்கிலேயர்கள் உண‌ர்ந்ததால்தான் பஞ்சமி நிலம் தலித் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அண்டை மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் நிலச் சீர்திருத்தம் செவ்வனே நிகழ்ந்தபோது, தமிழகத்தில் மட்டும் ஏன் நிலச் சீர்திருத்தம் நடைபெறவில்லை?

க‌ருணாநிதி ஆட்சிக்கு வ‌ந்த‌தும் நில‌மில்லா ம‌க்க‌ளுக்கு 2 ஏக்க‌ர் நில‌ம் த‌ருவ‌தாக‌ சொன்னார். பின் புற‌ம்போக்கு நில‌ங்க‌ளை யார் ப‌யிர் செய்கிறார்க‌ளோ அவ‌ர்க‌ளுக்கு ப‌ட்டா வழ‌ங்கப்ப‌டும் என்றார். அதாவ‌து திருட‌ன் கையில் சாவியைக் கொடுக்கும் இந்த‌ முறையில் உண்மையில் ப‌ய‌ன‌டைவ‌து பிற்படுத்த‌ப்ப‌ட்டோரும் முற்ப‌டுத்த‌ப்ப‌ட்டோரும் தான். நில‌ங்க‌ளை தலித் ம‌க்க‌ளுக்கு ப‌கிர்ந்த‌ளிக்க‌ வேண்டிய‌ அர‌சு, திட்ட‌மிட்டு பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட ம‌ற்றும் முற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு கொடுப்ப‌து ஒரு க‌ண்ணில் வெண்ணையும் ம‌றுக‌ண்ணில் சுண்ணாம்பும் வைப்ப‌த‌ற்கு ச‌ம‌மான‌த‌ல்ல‌வா?

சுதந்திர இந்தியாவில் 60 சதவிகித மக்கள் தங்களின் அன்றாட உணவிற்கே நிலச்சுவான்தார்களிடம் இன்னும் கையேந்தும் நிலை தொடர்கிறது. இதை மாற்ற இம் மக்களின் வாழ்வை உயர்த்த மத்திய மாநில அரசுகள் இதுநாள்வரை எந்தத் திட்டத்தையும் முறையாக நடைமுறைப்படுத்தாமல், இம் மக்களை வெறும் வாக்கு வங்கிகளாக வெட்கமே இல்லாமல் பயன்படுத்திவருவது உலகில் எங்குமே நிகழாத மாபெரும் மனித உரிமை மீறல்.

தமிழ்நாடு எஸ்டேட் சட்டம் 1948, தமிழ்நாடு நிலக் குத்தகை சட்டம் 1956, தமிழ்நாடு நிலச் சீர்திருத்த சட்டம் 1961 என சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் எத்தனையோ நிலச் சீர்திருத்த சட்டங்கள் இயற்றப்பட்டது. ஆனால் இவற்றினால் நிலம் அதிகம் வைத்திருப்போர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் நிலமீட்பு போராட்டங்களை முன்னெடுக்காத தலித் இயக்கங்கள் ஏதோ கடமைக்கு சில போராட்டங்கள் செய்வதுதான் மன்னிக்க முடியாத துரோகம். இந்தியாவைப் பொருத்தமட்டில் நிலம் தான் ஜீவாதாரம்; நிலமில்லையேல் ஏது வாழ்வாதாரம்!

உலகில் நிறம், இனம் மற்றும் சாதியப் பிரிவினையால் பாதிக்கப்படும் 200 மில்லியன் மக்களில் 160 மில்லியன் மக்கள் இந்திய தலித் மக்கள் என ஜக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை கவுன்சில் (UNHRC) கூறுகிறது. அதும‌ட்டுமல்லாமல் இந்தியாவில் 40 மில்லியன் தலித் மக்கள் கொத்தடிமையாக இருக்கிறார்கள் எனவும் ஜநா தெரிவிக்கின்றது.

தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான தேசிய கமிஷனின் புள்ளிவிபரப்படி ஜீலை 2004 முதல் ஆகஸ்ட்டு 2006 வரை சுமார் 2389 கொலை, 4814 கற்பழிப்பு என மொத்தம் 99746 வழக்குகள் தலித் மக்கள் மீது திணிக்கப்படும் வன்முறைக்கெதிராக இந்த நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 1999 ம் ஆண்டை தமிழக அரசு தீண்டாமைக்கு எதிரான ஆண்டு என அறிவித்ததோடு சரி, தீண்டாமையைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை 19.18 சத‌விகித தலித் மக்களின் நிலப்பங்கீடு வெறும் 7.1 சதவிகிதம் மட்டுமே. ஆகையால் 2002 போபால் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள 21 தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும். அதுமட்டுமல்லாமல் நிலப்பங்கீடு, தனியார் துறை இடஒதுக்கீடு, பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி, குறைந்தது 600 சதுர அடி குடியிருக்க வீடு, மூத்த தலித் மக்களுக்கு ரூ1000 மாத உதவித்தொகை, தலித் பெண் குழந்தைகளுக்கு சிற‌ப்பு உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, வேலையில்லா தலித் பட்டதாரிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை, தலித் தொழில் தொடங்க வட்டியில்லா வங்கிக் கடன் மற்றும் மானியம், காலனி தோறும் இணையத்தொடர்புடன் கூடிய கணினி வசதி, படிப்பகம், சுயவுதவிக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவி, தலித் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, மிகவும் பின்தங்கிய தலித் குடும்பங்களுக்கு கரவல்மாடு, சாதிய வன்முறையால் பாதிப்படைந்த குடும்பத்திற்கு 5 லட்சமும் உயிரிழந்த குடும்பத்திற்கு 10 லட்சமும் அரசு உடனடியாக வழங்கவேண்டும். தனியார் கலை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் தலித் மாணவர்களின் படிப்புச்செலவை அரசே ஏற்றுகொள்ளுதல் என எல்லா வகையிலும் இம் மக்களின் சமூகப் பாதுகாப்பை அரசு இனியாவது நிறைவேற்ற முன்வரவேண்டும், இல்லையேல் எதிர்வரும் காலங்களில் இந்தியாவின் சனநாயக முகம் கிழிபட்டு, வளமான பாரதம் கானல்நீராகவே தொடரும்.

நன்றி!

Leave a Reply