Pages

Banner 468

Subscribe
Sunday, August 3, 2008

இரண்டு எதிரிகள்! - அம்பேத்கர்

0 comments
 
இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்!

நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.

மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். அரசியல் அதிகாரத்தைப் போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம் இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும். தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம் அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில் பலன் தரக் கூடியதாகும்.

புதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல் அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு. இதற்கு பøகவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின், சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம். பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர் மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக விடுதலையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

நன்றி:http://karuppupaiyan.blogspot.com

Leave a Reply